சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் இருந்து இலங்கைக்கு எச்சரிக்கை
இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் சர்வதேச கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான பிரதி உயர்ஸ்தானிகர் நடா அல் நஷீப் தெரிவித்துள்ளார்.
இத்தகைய கடுமையான சட்டங்கள் இருக்கும் வரை இலங்கை உண்மையான நல்லிணக்கத்தையோ அல்லது நிலையான சமாதானத்தையோ அடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது அமர்வில் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே பிரதி உயர்ஸ்தானிகர் நடா அல் நஷீப் இவ்வாறு தெரிவித்தமை விசேட அம்சமாகும்.
போராட்டத் தலைவர்கள் கைது, நகைச்சுவை நிகழ்ச்சிகளின் போது கருத்து தெரிவித்ததற்காக ஆட்களைக் கைது செய்தல், போராட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டமை ஆகியவை கடந்த காலங்களில் காணப்பட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் என அவர கூறியுள்ளார்.
இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற போராட்டங்களை பாதுகாப்புப் படையினர் கையாண்ட விதம் தொடர்பில் தான் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் மனித உரிமைகளுக்கான பிரதி உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக சர்வதேச தரத்திற்கு ஏற்ப சட்டம் கொண்டு வருவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும், ஆனால் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் மூலம் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
எனவே அதனை வாபஸ் பெறுமாறு பிரதி உயர்ஸ்தானிகர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் ஆதரவை வழங்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தயாராக இருப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான பிரதி உயர்ஸ்தானிகர் நடா அல் நஷீப் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் அரசியல் கட்சிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்துள்ள கலந்துரையாடல் குறித்து அவர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.
அத்துடன், தொல்பொருள் காடுகள் அல்லது பாதுகாப்பு நோக்கங்களுக்காக காணிகளை கையகப்படுத்துவதை நிறுத்தும் ஜனாதிபதியின் தீர்மானம் பாராட்டுக்குரியது என மனித உரிமைகளுக்கான பிரதி உயர்ஸ்தானிகர் நடா அல் நஷீப் மேலும் தெரிவித்துள்ளார்.