இலங்கையில் வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தும் மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் ஊடாக இடம்பெறும் நிதிமோசடி தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக வட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டு, தொடர்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு நிதி அல்லது உதவிகள் கோரி, குறுந்தகவல்கள் அனுப்பப்படுவதாகக் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் போலி இணையப் பக்கங்கள், சமூக வலைத்தள கணக்குகள் மற்றும் குறுந்தகவல்கள் என்பவற்றின் ஊடாக வெவ்வேறு வங்கிகள், அரச அல்லது அரச சார்பற்ற நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் போன்றவற்றின் போர்வையில் இவ்வாறு நிதி மோசடி இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஓ.டி.பி. என்ற ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தும் கடவு எண் மற்றும் இலத்திரனியல் வங்கி கொடுக்கல் வாங்கல்களுக்கான கடவுச்சொல் என்பவற்றைப் பகிர்வதைத் தவிர்க்குமாறும் கோரப்பட்டுள்ளது.
அவ்வாறு இணைய நிதிக் குற்றங்களால் பாதிக்கப்பட்டிருந்தால், மக்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கீழ் உள்ள கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் dir.ccidShpolice.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாக முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.