சமூக ஊடகங்கள் வழியாக இடம்பெறும் நிதிமோசடி தொடர்பில் எச்சரிக்கை!
சமூக ஊடகங்கள் வழியாக நடத்தப்படும் மோசடிகள் அதிகரித்து வருவது குறித்து இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு பொதுமக்களை எச்சரித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக, சமூக ஊடக தளங்கள் மூலம் ஆன்லைன் மற்றும் நிதி மோசடிகளைச் செய்வதற்கான முயற்சிகள் அதிகரித்துள்ளதாக இலங்கை CERT எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
சைபர் குற்றவாளிகள் வரவிருக்கும் பண்டிகை காலத்தையும் தற்போதைய வானிலை தொடர்பான பேரிடர் நிலைமைகளையும் பயன்படுத்தி பொதுமக்களின் நம்பிக்கையை பெற்று மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசு நிறுவனங்கள், பொதுத் துறைகள், முக்கிய சில்லறை விற்பனை கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் என்று காட்டிக் கொள்ளும் நபர்கள் இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், இது தொடர்பில் கணிசமான முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.





