போர் பதற்றம்: ஏவுகணைச் சோதனை நடத்திய இந்தியா, பாகிஸ்தான்

பாகிஸ்தான் தற்காப்பு அமைச்சு ஏவுகணைச் சோதனைக்குத் திட்டமிட்டிருப்பதால் எல்லையில் போர் பதற்றம் நிலவுகிறது.
காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 26 சுற்றுப் பயணிகள் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், கராச்சி கடலோரப் பகுதியில் ஏப்ரல் 23, 24 ஆகிய தேதிகளில் தரையிலிருந்து இலக்கைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைச் சோதனை நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டிருப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும், பாகிஸ்தானின் நடவடிக்கைகளை இந்தியாவின் அனைத்து அமைப்புகளும் உற்று கவனித்து வருவதாகவும் அது கூறியுள்ளது.
பாகிஸ்தானின் போர் விமானங்களை அந்நாட்டு எல்லையில் நிலைநிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, கடல்சார் இலக்குகளைத் துல்லியமாகக் குறிவைத்து தாக்கும் ஏவுகணைச் சோதனையை இந்தியாவும் வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 24) நடத்தியுள்ளது.
இது தொடர்பாக இந்திய கடற்படை வெளியிட்டுள்ள பதிவில்,”இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சூரத் கப்பலிலிருந்து கடல்சார் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைச் சோதனை வெற்றிப் பெற்றுள்ளதாகவும் இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதில் அச்சோதனை மற்றொரு மைல்கல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.