ஒவ்வொரு நாளும் 10 ஆயிரம் அடிகள் நடப்பது கட்டாயமில்லை – நரம்பியல் விஞ்ஞானி விளக்கம்

ஒவ்வொரு நாளும் 10 ஆயிரம் அடிகள் நடப்பதால்தான் உடல் எடையை குறைக்க முடியும் என்பதற்கு ஆதாரம் இல்லை என தெரியவந்துள்ளது.
அந்த நம்பிக்கைக்கு உறுதியான அறிவியல் ஆதாரம் இல்லையென்று, நியூயார்க் பல்கலைக்கழக நரம்பியல் விஞ்ஞானி வெண்டி சுசூகி தெரிவித்துள்ளார்.
நடைப்பயிற்சி உடலுக்கு நன்மை தருவதில் சந்தேகமில்லை. ஆனால், 10 ஆயிரம் அடி நடப்பது ஒரு விளம்பரத் தந்திரம் மட்டுமே என அவர் கூறினார்.
அதற்குப் பதிலாக, தினமும் 2,500 முதல் 4,000 அடிகள் நடப்பதாலும் திடீர் மரணம், பக்கவாதம், இதய நோய் போன்ற அபாயங்களை கணிசமாகக் குறைக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
சுசூகியின் இந்தக் கருத்துக்கு மருத்துவர் பழனியப்பன் மாணிக்கம் என்பவரும் ஆதரவு தெரிவித்தார்.
10 ஆயிரம் அடிகள் நடக்க ஒன்றரை மணி நேரம் தேவைப்படும். பலரால் அது சாத்தியமல்ல. அதற்குப் பதிலாக, தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலம் மேலும் அதிக கலோரிகளை எரிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.