அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விவேக் ராமசாமி விலகல்: ட்ரம்பை ஆதரிக்க முடிவு!
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளர் தேர்வு போட்டியிலிருந்து விலகுவதாக விவேக் ராமசாமி அறிவித்துள்ளார். மேலும், டொனால்ட் ட்ரம்ப்பை அதிபராக்குவதற்காக பணியாற்றப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அந்நாட்டில் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி இடையே தான் அதிபர் தேர்தலுக்கான போட்டி நிலவுகிறது. தற்போது ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் அதிபராக உள்ளார்.இந்நிலையில் வரவிருக்கும் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்யும் போட்டி சூடுபிடித்துள்ளது. குடியரசு கட்சியின் வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 38 வயதான இளம் தொழிலதிபர் விவேக் ராமசாமி இடையே கடும் போட்டி நிலவியது.
இந்நிலையில் முதல் மாகாணமாக, ஐயோவா-வில் குடியரசு கட்சியில் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான போட்டியில் டொனால்ட் ட்ரம்ப்புக்கும், விவேக் ராமசாமிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. பரபரப்பான உள்கட்சி தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.
இந்த தேர்தல் முடிவுக்கு முன்னதாக டிரம்ப் வெளியிட்ட பிரசார வீடியோ ஒன்றில், “என்னுடைய ஆதரவாளர் எனக் கூறி விவேக் ராமசாமி செய்வதெல்லாம் ஏமாற்று பிரசார தந்திரங்களின் வடிவமாக உள்ளது.அவர் மிகவும் தந்திரமாக செயல்படுகிறார். விவேக்கிற்கு வாக்கு அளிப்பது எதிர் அணிக்கு வாக்களிப்பது போன்றதாகும். இதை நம்பி ஏமாந்து விடாதீர்கள்” என கூறியிருந்தார்.விவேக் ராமசாமி டிரம்ப்பை பாராட்டியே பிரசாரங்களை செய்து வந்தார். ஆனால் டிரம்ப், விவேக் ராமசாமியை ஏமாற்று பேர் வழி என்ற ரீதியில் விமர்சித்து பிரசாரத்தை மேற்கொண்டார்.
இந்நிலையில், ஐயோவா மாகாணத்தில் டிரம்ப் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து திடீர் திருப்பமாக குடியரசு கட்சி அதிபர் வேட்பாளருக்கான போட்டியிலிருந்து விலகுவதாக விவேக் ராமசாமி அறிவித்துள்ளார். மேலும், “டொனால்ட் ட்ரம்ப் அதிபராக வருவதற்கு பணியாற்ற உள்ளேன்” எனவும் அவர் தெரிவித்துளது அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.