பெங்களூரு மண்ணில் சாதனை படைத்த கோலி!
இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் புதன்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. புதன்கிழமை அன்று மைதானம் இருக்கும் பகுதியில் மழை வெளுத்து வாங்கிய நிலையில், முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த போட்டியில் தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய நட்சத்திர வீரர் விராட் கோலி அரைசதம் அடித்து அசத்தினார். இளம் வயது கோலியைப் போல் அசத்தலான மட்டையைச் சுழற்றிய அவர் சதம் அடித்து மிரட்டுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், 3-ம் நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் 102 பந்தில் 8 பவுண்டரி, 1 சிக்சருடன் 70 ரன் எடுத்த நிலையில் அவர் அவுட் ஆனார். ஆனாலும் சிறப்பாக ஆடி இந்திய அணிக்கு எழுச்சியூட்டிய பெங்களூரு மண்ணில் அசத்தலான சாதனையைப் படைத்துள்ளார்.
இந்த ஆட்டத்தில் கோலி 53 ரன்கள் எடுத்திருந்த போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 9000 ரன்களை கடந்து சாதனை படைத்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 ஆயிரம் ரன்களை குவித்த 4-வது இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இந்தப் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் (15,921 ரன்) முதல் இடத்திலும், ராகுல் டிராவிட் (13,265 ரன்) 2வது இடத்திலும், சுனில் கவாஸ்கர் (10,122 ரன்) 3வது இடத்திலும், விராட் கோலி (9,017 ரன்) 4வது இடத்திலும், வி.வி.எஸ் லட்சுமனன் (8,781 ரன்) 5வது இடத்திலும் உள்ளனர்.
மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் 3வது இடத்தில் பேட்டிங் ஆடி 15,000 ரன்களை கடந்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார்.