டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக பிசிசிஐயிடம் அறிவித்த விராட் கோலி

ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
இதற்கான அணி இந்த மாத இறுதியில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து புதிய கேப்டனை நியமிக்க பிசிசிஐ ஆலோசித்து வருகிறது.
இதற்கிடையில் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பிசிசிஐ விராட் கோலி இடம் கேட்டுக் கொண்டுள்ளது.
“ரோகித் சர்மாவின் ஒய்வை தொடர்ந்து விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பிசிசிஐ இடம் தெரிவித்துள்ளார். ஆனால் முக்கியமான இங்கிலாந்து தொடர் வருவதால் அனுபவம் வாய்ந்த வீரர் அணியில் இருக்க வேண்டும் என்பதற்காக பிசிசிஐ இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு விராட் கோலியிடம் கேட்டுக் கொண்டுள்ளது” என்று பிசிசிஐ தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது. கடைசியாக நடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ரன்கள் அடிக்க மிகவும் சிரமப்பட்டனர். இந்த இரண்டு டெஸ்ட் தொடர் தோல்விக்கு இவர்கள் இருவருமே முக்கிய காரணமாக பேசப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் முதல் டெஸ்டில் விராட் கோலி சதம் அடித்து இருந்தாலும் அடுத்து விளையாடிய நான்கு டெஸ்ட்களில் பெரிதாக ரன்கள் அடிக்க வில்லை. விராட் கோலி தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் இந்திய அணியின் மிடில் ஆர்டர் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இல்லாமல் இருக்கும். தற்போது இந்திய டெஸ்ட் அணியில் கேஎல் ராகுல், சுப்மான் கில், ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பந்த் மட்டுமே கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றனர். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா கடந்த 11 ஆண்டுகளாக இந்திய டெஸ்ட் அணிக்கு பலம் சேர்த்து வந்தனர். விராட் கோலி 2014 ஆம் ஆண்டு இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக அறிமுகமானார். ரோகித் சர்மா கடந்த 2022 ஆம் ஆண்டு டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்ற பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பிறகு இவர்கள் ஓய்வு பெறுவார்கள் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டு பேருமே 2027 ஆம் ஆண்டு நடைபெறும் ஒரு நாள் கிரிக்கெட் உலக கோப்பையில் விளையாட ஆர்வமாக உள்ளனர். இதனை வெளிப்படையாகவும் சில இடங்களில் தெரிவித்துள்ளனர். இதனால் அதுவரை இவர்கள் இருவரும் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரோகித் சர்மாவில் திடீர் முடிவு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனி ரோகித் சர்மா ஒருநாள் தொடரில் மட்டும் விளையாட உள்ளார். விராட் கோலி டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றால் இந்தியாவின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தரும்.