அதிக வெப்பமான வானிலை! கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு
கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வெப்பச் சுட்டெண் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தை விட அதிக உஷ்ணம் எதிர்பாரக்கப்படுவதாகவும், இந்த நிலைமை எதிர்வரும் சில மாதங்களுக்கு தொடரும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே அதிக வெப்பமான வானிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதகமான சூழ்நிலைகளில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாப்பதற்காக வழிகாட்டுதல்கள் சில வௌியிடப்பட்டுள்ளன.
இது தொடர்பில் அதிபர்களுக்கு அறிவிக்குமாறு அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, அதிக வெப்பநிலை நிலவும் நாட்களில் விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிக வெப்பநிலை நிலவும் நாட்களில் இல்ல விளையாட்டு போட்டிகள் மற்றும் பயிற்சிகளை நடத்துவதை தவிர்க்குமாறும் மாணவர்களை அதிகளவில் நீர் அருந்தச் செய்யுமாறும் சுகாதார அமைச்சின் குறித்த அறிவுறுத்தல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் வெப்பமான காலநிலை காரணமாக எமது உடலில் இருந்து அதிகளவிலான வியர்வை வெளியேறும். இதன்போது வியர்வையுடன் நீர் மற்றும் உப்பும் வெளியேறுகிறது.
இதன்போது எமக்கு கலைப்பு ஏற்படலாம். அதோடு சோடியம் குறைபாடும் ஏற்படுகிறது.இதனால் மயக்கம் ஏற்படலாம். உடல் வலி, தலைவலி, வாந்தி, நித்திரை மயக்கம், நித்திரை இன்மை உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே இதனை தவிர்த்துக் கொள்ள நீர், இளநீர், கஞ்சி மற்றும் ஜீவனி எடுத்துக்கொள்ளலாம்.
மேலும், தோல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே சிறுவர்களை காலை மற்றும் மாலை வேளைகளில் நீரில் நனைப்பது சிறந்தது.