உத்தரப்பிரதேசம் – மூட நம்பிக்கையின் உச்சம்… கங்கை நதியில் 2 நாட்களாக கட்டி வைக்கப்பட்ட வாலிபரின் உடல்!
பாம்பு கடித்து உயிர் இழந்த இளைஞர் மீண்டும் உயிர் பெறுவார் என நம்பி இரண்டு நாட்களாக அவரது உடலை கங்கை நதியில் அவரது குடும்பத்தினர் கட்டி வைத்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள புலந்த்ஷாஹரைச் சேர்ந்த வாலிபர் ஹேமந்த் குமார்(20). அவர் கடந்த ஏப்ரல் 26ம் திகதி வயலில் வேலைசெய்து கொண்டிருந்தார்.அப்போது அவரை பாம்பு கடித்தது. இதனால் விஷம் ஏறி அவர் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் ஹேமந்த் குமாரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இறந்தவரின் உடலை கங்கை நதியில் கட்டி வைத்தால், உயிர் பிழைப்பார் என்று ஹேமந்த் குமாரின் குடும்பத்தினரிடம் உள்ளூரைச் சேர்ந்த மந்திரவாதி கூறியுள்ளார். இதனை நம்பி இறந்த ஹேமந்த் குமார் உடலை கங்கை நதியில் கட்டி வைத்தனர்.
இதனால் பாம்பின் விஷம் தணிந்து அவர் உயிர் பிழைப்பார் என்று ஹேமந்த் குமாரின் குடும்பத்தினர் காத்திருந்தனர். ஆனால், இரண்டு நாட்களாகியும், பாம்பு கடியால் இறந்து போன ஹேமந்த் குமார் உயிர் பெறவில்லை. இதனால் உயிரிழந்தவர்கள் மீண்டும் உயிர் பெறமாட்டார்கள் என்பதை உணர்ந்த அவரது குடும்பத்தினர், முறைப்படி உடலை தகனம் செய்தார்.
இறந்து போன ஹேமந்த் குமார் உடலை அவரது குடும்பத்தினர் கங்கையில் கட்டி வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.