அமெரிக்கா: மலையேற்றத்தில் ஈடுபட்ட இந்தியர் உள்பட 3 பேர் பலி

அமெரிக்காவின் சியாட்டில் நகரை சேர்ந்தவர் விஷ்ணு இரிகிரெட்டி (வயது 48). இந்திய வம்சாவளியான இவர் மலையேற்றம் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்.
இந்நிலையில், தன்னுடைய நண்பர்களான டிம் குயென் (வயது 63), அலெக்சாண்டர் மார்டினென்கோ (வயது 36) மற்றும் ஆன்டன் செலிக் (வயது 38) ஆகியோரை அழைத்து கொண்டு மலையேற்றத்திற்கு சென்றுள்ளார். இதற்காக அவர்கள் வட அமெரிக்காவின் மேற்கே வாஷிங்டன் மாகாணத்தில் வடக்கு கேஸ்கேட் மலை பகுதியை தேர்வு செய்தனர். கிரானைட் சிகரம் அமைந்த இந்த பகுதியில் இவர்கள் ஒரு குழுவாக சென்றனர்.
அப்போது, அவர்களை நோக்கி பலத்த காற்றுடன் கூடிய புயல் ஒன்று வந்துள்ளது. இதனை கவனித்த அவர்கள், உடனடியாக திரும்பி செல்ல தொடங்கினர். அப்படி செல்ல முயன்றபோது, அவர்கள் தவறி 200 அடி பள்ளத்தில் விழுந்துள்ளனர். எனினும், அவர்களில் செலிக் அதிர்ஷ்டவசத்தில் உயிர் தப்பினார்.
உடனடியாக, 64 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனம் ஒன்றில் சென்று அதிகாரிகளிடம் விபத்து பற்றி கூறியுள்ளார். எனினும், இந்த விபத்தில் சிக்கி விஷ்ணு உள்பட 3 பேர் உயிரிழந்தனர். விஷ்ணு திறமையான மலையேற்ற வீரர் என்றும், இயற்கையை மகிழ்ச்சியாக கொண்டாடுபவர் என்றும் அவருடைய குடும்பத்தினரும், நண்பர்களும் தெரிவித்தனர்.
அவருடைய உடல் தகனம் இன்று நடைபெறுகிறது. பலத்த காயமடைந்த செலிக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.