பல மாதப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா, உக்ரைன்

பல மாதப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, உக்ரேனிய எரிசக்தி, கனிமவளப் பயன்பாடு குறித்து அமெரிக்கா – உக்ரேன் இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
ரஷ்யாவுடனான போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உக்ரேனின் பொருளியல் மீட்சிக்கு உதவும் வகையில், மறுசீரமைப்பு முதலீட்டு நிதி ஒன்றை ஏற்படுத்த அவ்விரு நாடுகளும் இணக்கம் கண்டுள்ளன.
உக்ரேனில் அமைதியும் செழிப்பும் நீடித்திருக்கச் செய்வதில் இருதரப்பும் கடப்பாடு கொண்டுள்ளதை இந்த ஒப்பந்தம் காட்டுவதாக அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.உக்ரேனைப் பொறுத்தமட்டில், அமெரிக்காவிடமிருந்து ராணுவ உதவி பெறுவதற்கு இந்த ஒப்பந்தம் மிகவும் தேவையான ஒன்று.
கிராஃபைட், டைட்டேனியம், லித்தியம் போன்ற அரிய கனிமப் பொருள்கள் உக்ரேனில் அதிக அளவில் இருப்பதாக நம்பப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ராணுவப் பயன்பாடுகள், தொழிலக உள்கட்டமைப்பு போன்றவற்றில் அவை பயன்படுத்தப்படுவதால் அவற்றுக்கு அதிகத் தேவை நிலவுகிறது.அத்தகைய அரியவகை கனிமங்களைப் பொறுத்தமட்டில், உலகக் கையிருப்பில் 90% சீனாவிடமே உள்ளது.
அமெரிக்கா – சீனா இடையே வணிகப் போர் நிலவிவரும் வேளையில், உக்ரேனுடனான இந்த ஒப்பந்தம் அமெரிக்காவிற்கும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள அமெரிக்கா – உக்ரேன் மறுசீரமைப்பு முதலீட்டு நிதியானது, கடந்த 2022 பிப்ரவரியில் தொடங்கிய ரஷ்யப் படையெடுப்பிற்குப்பின் உக்ரேனுக்கு அமெரிக்கா வழங்கிய நிதி, ராணுவ ஆதரவை அங்கீகரிக்கிறது என்று புதன்கிழமை (ஏப்ரல் 30) அமெரிக்க நிதியமைச்சு வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இந்த உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்காக உக்ரேன் துணைப் பிரதமர் யூலியா ஸ்விரிடெங்கோ வாஷிங்டன் சென்றிருந்தார்.அனைத்துலக முதலீட்டை உக்ரேன் ஈர்க்க புதிய மறுசீரமைப்பு முதலீட்டு நிதி உதவும் என்று எக்ஸ் ஊடகம் வழியாகத் யூலியா தெரிவித்துள்ளார்.
கனிமவளம், எண்ணெய், எரிவாயு போன்றவை சார்ந்த திட்டங்களை அமெரிக்காவுடனான உடன்பாடு உள்ளடக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.50:50 என்ற சம விகிதத்திலான இந்தப் பங்காளித்துவதற்கு உக்ரேன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.