போர் தொடர்பான புதிய பேச்சுவார்த்தைக்கு தயாராகும் அமெரிக்கா – உக்ரைன்

அமெரிக்காவும் உக்ரேனும் போர் தொடர்பான புதிய பேச்சுவார்த்தைகளைத் தொடரவிருக்கின்றன.
அடுத்த செவ்வாய்க்கிழமை இரு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளும் சவுதி அரேபியாவில் சந்திக்கவிருக்கின்றனர்.
ரஷ்ய- உக்ரேன் போரை முடிவுக்குக்கொண்டுவர வழிவகுக்கும் அமைதி உடன்பாட்டை எட்ட அவர்கள் முற்படுகின்றனர்.
சண்டை நிறுத்தத்திற்கான முதற்கட்ட இணக்கத்தைச் எட்டுவதற்கு முயற்சி செய்வதாக மத்திய கிழக்கிற்கான அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்கோஃப் தெரிவித்தார்.
உக்ரேன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப்புக்கு அனுப்பிய சமரசக் கடிதம், நல்ல ஒரு தொடக்கமாய் அமைவதாக அவர் சொன்னார்.
வெள்ளை மாளிகையில் இரு அதிபர்களுக்கும் இடையே நடந்த வாக்குவாதத்திற்குப் பிறகு, உக்ரேனுடனுக்கான ராணுவ உதவிகள், உளவுத் தகவல் பரிமாற்றம் ஆகியவற்றை அமெரிக்கா நிறுத்திவைத்தது.
ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் அமைதி உடன்பாடு ஒன்றே தீர்வு என்று டிரம்ப் கூறுகிறார்.