அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – 132 ஆண்டு கால சாதனையை முறியடித்த டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் டொனால்ட் டிரம்ப், 132 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த டொனால்ட் டிரம்ப், இம்முறை தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, பல கட்டங்களைத் தாண்டி நேற்று வெற்றி என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
அமெரிக்காவின் மிக முக்கியமான மாகாணங்களில் வெற்றி பெற்றதன் மூலம், பெரும்பான்மை பலத்தை பெற்றதோடு, மகத்தான வெற்றி என்று பெருமையடித்துக் கொள்ளும் அளவுக்கு பல விஷயங்கள் இந்த தேர்தலில் நடந்திருப்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
அமெரிக்க ஜனாதிபதியாக தொடர்ச்சியாக அல்லாமல், இரண்டாவது முறையாக பதவியேற்றிருக்கும் இரண்டாவது தலைவராக டொனால்ட் டிரம்ப் உருவாகியிருக்கிறார். கடைசியாக இந்த சாதனை 132 ஆண்டுகளுக்கு முன்பு படைக்கப்பட்டது.
க்ரோவர் கிளெவ்லான்ட் அமெரிக்காவின் 22வது மற்றும் 24வது ஜனாதிபதியாக பதவியேற்றார்.
1885ஆம் ஆண்டு முதல் 1889ஆம் ஆண்டு வரையிலும், அடுத்து 1893 முதல் 1897ஆம் ஆண்டு வரையிலும் இரண்டு முறை பதவி வகித்துள்ளார்.
இதுபோல, டிரம்ப் 2016ஆம் ஆண்டு ஜனாதிபதியாகி 2020ஆம் ஆண்டு ஜோ பைடனிடம் தோற்று, 2024ஆம் ஆண்டு கமலா ஹாரிஸை வென்று சாதனையை முறியடித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கும் அதிக வயதுடையவராக ஜனாதிபதியாக ஜோ பைடன் உள்ளார். அவருக்கு தற்போது 82 வயதாகிறது. ஆனால், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், அதிக வயதுடைய நபர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்றால் டொனால்ட் டிரம்ப்தான் அது, அவருக்கு தற்போது 78 வயதாகிறது.
கடந்த இருபது ஆண்டுகளில், மக்களின் அதிக வாக்குகளைப் பெற்ற முதல் குடியரசுக் கட்சி வேட்பாளராகவும் டொனால்ட் டிரம்ப் இருப்பதாக கூறப்படுகின்றது.
இத்தனை பெருமைகளுக்கு இடையே, அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த காலத்திலேயே இரண்டு முறை குற்றச்சாட்டு நடவடிக்கைகளை எதிர்கொண்டவர் என்ற பட்டத்தையும் அவரே பெருகிறார். ஆனால், இரண்டு வழக்குகளிலும் அவர் விடுவிக்கப்பட்டார்.