அமெரிக்க அதிபர் தேர்தல் : டொனால்ட் டிரம்ப்பின் பரிந்துரையை மறுத்த கமலா ஹாரிஸ்
இவ்வாண்டின் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்ப், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசுடனான விவாதத்தை செப்டம்பர் மாதம் நான்காம் தேதியன்று ஃபாக்ஸ் நியூஸ் ஒளிவழி முலம் மேற்கொள்ளலாம் எனப் பரிந்துரைத்தார்.
ஆனால் ஏபிசி நியூஸ் ஒளிவழியில் அதிபர் தேர்தல் விவாதத்தை செப்டம்பர் 10அன்று ஒளிபரப்பத் திட்டமிடப்பட்டிருந்தது அதிலிருந்து முன்னாள் அமெரிக்க அதிபரான டிரம்ப் பின்வாங்க முயற்சி செய்கிறார் என்று ஹாரிஸ் கூறியுள்ளார்.
முதலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடவிருந்த தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் நடைபெற்ற விவாதத்துக்கான விதிமுறைகள் இந்த விவாதத்துக்கும் பொருந்தும் என்று டிரம்ப், தமக்குச் சொந்தமான ட்ரூத் சோஷியல் சமூக தளத்தில் வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட் 2) தெரிவித்தார். எனினும், இம்முறை விவாதம் தேர்தலின் முக்கியத் தொகுதியான பென்சில்வேனியா மாநிலத்தில் பார்வையாளர்களால் முழுமையாக நிறைந்த அரங்கில் நடக்கும் என்று டிரம்ப் குறிப்பிட்டார்.
இரண்டாவது விவாதத்தை செப்டம்பர் 10ஆம் திகதியன்று ஏபிசி நியூஸ் ஒளிவழியில் நடத்த டிரம்ப்பும் பைடனும் ஒப்புக்கொண்டனர். அந்த விவாதம் ஃபாக்ஸ் நியூஸ் ஒளிவழிக்கு மாற்றப்படவேண்டும் என்று டிரம்ப் பரிந்துரைத்தார்.
ஃபாக்ஸ் நியூஸ், அவரின் ஆதரவாளர்களிடையே ஆகப் பிரபலமாக இருக்கும் ஒளிவழியாகும்.
அதிபர் தேர்தலிலிருந்து பைடன் விலகிக்கொண்ட பிறகு ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட போதுமான கட்சி வாக்குகளைப் பெற்றுவிட்ட ஹாரிஸ், முதலில் திட்டமிடப்பட்டபடியே விவாதத்தில் பங்கேற்கத் தாம் எண்ணம் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
“அவர் (டிரம்ப்) ஒப்புக்கொண்டதைப் போல் செப்டம்பர் 10ஆம் திகதியன்று அங்கிருப்பேன். அங்கு அவரைச் சந்திக்க நான் விரும்புகிறேன்,” என்று ஹாரிஸ் எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.