ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவிற்கான அமெரிக்க அமைதித் திட்டத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில், ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க நேரப்படி 18:00 மணிக்குள் ஒரு உடன்பாட்டை எட்ட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
“இந்த கடைசி வாய்ப்பு ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், இதற்கு முன்பு யாரும் கண்டிராத அளவுக்கு ஹமாஸுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படும்” என்று டிரம்ப் ட்ரூத் சோஷியல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அமைதி திட்டத்தில், சண்டையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வந்து, ஹமாஸால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் 20 உயிருள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளையும் இறந்ததாகக் கருதப்படும் பணயக்கைதிகளையும் 72 மணி நேரத்திற்குள் விடுவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டிரம்ப்பின் தலைமையில் ஒரு இடைக்கால நிர்வாக அமைப்பு உருவாக்கப்படும், ஹமாஸ் போராளிகள் முழுமையாக ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி மற்றும் இஸ்ரேல் பிரதமர் இடையே நடந்த சந்திப்பின் போது இந்த அமைதி திட்டம் அறிவிக்கப்பட்டு நெதன்யாகுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் டிரம்ப் ஹமாஸ் அமைப்பிற்கு காலக்கெடு விடுத்தார்.





