இலங்கைக்கு அமெரிக்கா மேலும் 2 மில்லியன் டொலர் உதவி
டிட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவுவதற்காக மேலும் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் இன்று (ஜனவரி 13, 2026) அறிவித்துள்ளது.
இதன் மூலம் இச்சம்பவம் தொடர்பில் அமெரிக்கா வழங்கியுள்ள மொத்த மனிதாபிமான உதவித் தொகை 4 மில்லியன் டொலர்களாக (சுமார் 1.2 பில்லியன் ரூபா) அதிகரித்துள்ளது.
இந்த நிதி உதவியானது அம்பாறை, பதுளை, கம்பஹா, கேகாலை, புத்தளம் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும், மத்திய மாகாணத்தின் தோட்டப் பகுதிகளிலும் உள்ள மக்களின் உணவு, சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளது.
உலக உணவுத் திட்டம் (WFP) மற்றும் ‘வேர்ல்ட் விஷன்’ (World Vision) ஆகிய நிறுவனங்கள் ஊடாக இந்த நிவாரணங்கள் நேரடியாக வழங்கப்படவுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளைச் சீரமைக்கவும், வாழ்வாதாரங்களை மீண்டும் கட்டியெழுப்பவும் இந்த நிதி பங்களிக்கும் எனத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.





