இஸ்ரேலுக்கு 8 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுத விற்பனைக்கு அமெரிக்கா திட்டம் ; அமெரிக்க அதிகாரி தகவல்
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம், முன்மொழியப்பட்டுள்ள இஸ்ரேலுக்கான $8 பில்லியன் பெறுமானமுள்ள ஆயுத விற்பனை குறித்து காங்கிரசிடம் தகவல் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட காஸா போரில், தனது நட்பு நாடான இஸ்ரேலுக்கு அதன் ஆதரவைத் தொடர்ந்து காட்டிவருகிறது அமெரிக்கா.அந்தத் திட்டத்திற்குப் பிரதிநிதிகள் சபையிடமிருந்தும் செனட் குழுக்களிடமிருந்தும் ஒப்புதல் பெறப்படவேண்டும். திட்டத்தின்கீழ், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், குண்டுகள் உள்ளிட்டவை அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து கருத்துகள் கேட்டபோது அமெரிக்க வெளியுறவு அமைச்சு பதிலளிக்கவில்லை.
இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதத் தடை விதிக்கப்படவேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் பல மாதங்களாகக் கோரி வருகின்றனர். இருப்பினும், அமெரிக்கக் கொள்கையில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில், இஸ்ரேலுக்கு $20 பில்லியன் பெறுமான போர் விமானங்கள், மற்ற ராணுவச் சாதனங்களின் விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல் வழங்கியது.
காஸாவில் ஹமாஸ், லெபனானில் ஹிஸ்புல்லா, ஏமனில் ஹூதி ஆகிய ஈரான் ஆதரவான போராளிக் குழுக்களுக்கு எதிராக இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக்கொள்ள உதவுவதாக பைடன் நிர்வாகம் கூறியது.
காஸா மீதான தாக்குதலின்போதும் தொடர்ந்து இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்துவந்துள்ள வாஷிங்டன், அனைத்துலக அளவில் குறைகூறல்களை எதிர்நோக்குகிறது. 2.3 மில்லியன் பேர் கொண்ட காஸாவில், கிட்டத்தட்ட அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் படுகொலைத் தாக்குதல் நடத்தியதாகக் குறைகூறப்படுகிறது. இருப்பினும், அந்தக் குற்றச்சாட்டுகளை அது மறுத்துள்ளது.இதுவரை 45,000க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக காஸா சுகாதார அமைச்சு கூறியுள்ளது. மேலும் பலர் இடிபாடுகளுக்கு அருகில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.