சீன உதிரி பாகங்கள், மென்பொருள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்குத் தடை விதிக்க அமெரிக்கா திட்டம்
தேசிய பாதுகாப்புக் காரணங்களுக்காக சீன மென்பொருள் மற்றும் வன்பொருள் பொருத்தப்பட்ட வாகனங்களை அமெரிக்க சாலைகளில் ஓட்ட அமெரிக்கா தடை விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கான திட்டத்தை திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 23) அமெரிக்க நாடாளுமன்றத்தில் அந்நாட்டு வர்த்தகத் துறை முன்மொழியலாம் எனத் தகவல்கள் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் கூறியது.
அமெரிக்க ஓட்டுநர்கள் குறித்த விவரங்களையும் உள்கட்டமைப்புகள் பற்றிய தகவல்களையும் சீன நிறுவனங்கள் சேகரித்து வருகின்றன எனக் கூறப்பட்டது.மேலும், இணையம் மற்றும் போக்குவரத்து திசைகளைக் காட்டும் அமைப்பு நிறுவப்பட்ட வாகனங்களைச் சூழ்ச்சியாக வெளிநாட்டிலிருந்து கையாளுவது போன்றவை பைடன் அரசாங்கத்திற்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
திங்கட்கிழமையன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்மொழியப்படும் என எதிர்பார்க்கப்படும் திட்டமானது, சீனாவிலிருந்து முக்கிய தகவல் தொடர்புகள் அல்லது தானியங்கி ஓட்டுநர் அமைப்பு மென்பொருள் அல்லது சீன வன்பொருள் கொண்ட வாகனங்களை இறக்குமதி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கும் எனத் தகவல்கள் முன்னுரைத்ததாக ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.
இந்த நடவடிக்கை சீனாவில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள், மென்பொருள், உதிரிப்பாகங்கள் மீதான அமெரிக்காவில் தற்பொழுது இருக்கும் கட்டுப்பாடுகளைவிட அதிகமாகும். கடந்த வாரம், சீன இறக்குமதிகள் மீதான தீர்வை பைடன் நிர்வாகம் உயர்த்தியது. இதில் மின்சார வாகனங்கள் மீதான 100 சதவீதம் வரி, மின்சார வாகன மின்னூட்டிகள், முக்கிய தாதுக்கள் மீதான கட்டண உயர்வு ஆகியவையும் அடங்கும்.
இந்த ஒழுங்குமுறையை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு முன்பு, பொதுமக்கள் கருத்து தெரிவிக்க 30 நாள்கள் அவகாசம் வழங்க அந்நாட்டு வர்த்தகத் துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கூறின.
சீன மென்பொருள்களை வாகனங்களில் பயன்படுத்துவதற்கான தடை 2027ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தவும் சீன உதிரிப் பாகங்கள் மீதான தடை 2029ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அல்லது 2030ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தவும் அமெரிக்க வர்த்தகத் துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.