அமெரிக்க அரசாங்க முடக்கம் – இரண்டாவது வாரமாக தொடரும் நெருக்கடி
அமெரிக்காவில் அரசாங்க முடக்கம் இரண்டாவது வாரத்திலும் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி இடையே நிதி ஒதுக்கீடு மற்றும் அரசுச் செலவினங்கள் தொடர்பான விவகாரங்களில் ஒருமித்தக் கருத்து உருவாகாததாலேயே இம்முடக்கம் நீடிக்கிறது.
முக்கியமாக, ஒபாமாகேர் சுகாதாரத் திட்டங்களை நீட்டிப்பது மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்தின் போது இரத்து செய்யப்பட்ட திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்துவது குறித்தும் கட்சிகள் இடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.
இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான இணக்கம் ஏற்பட்டால்தான் அரசாங்கத்தை மீண்டும் திறக்க தேவையான ஆதரவை வழங்குவதாக ஜனநாயகக் கட்சி உறுதிபட தெரிவித்துள்ளது.
அரசாங்க முடக்கத்தின் நேரடி தாக்கமாக, இராணுவத்தினர் மற்றும் பிற முக்கியமான பொதுத்துறை ஊழியர்களுக்கு விரைவில் சம்பளங்களை வழங்க இயலாமல் போகும் நிலை உருவாகலாம் என்று கணிக்கப்படுகிறது.
இந்த முடக்கம் தொடரும் பட்சத்தில் நாட்டின் நிர்வாக இயந்திரமே முடங்கும் அபாயம் நிலவுவதாக அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.





