அமெரிக்கா விதித்துள்ள காலக்கெடு – காசாவில் தேடப்படும் சடலங்கள்
காசாவில் உயிரிழந்த பிணைக் கைதிகளின் சடலங்களைத் தேடும் நடவடிக்கையை ஹமாஸ் அமைப்பு தீவிரப்படுத்தியுள்ளது.
அடுத்து வரும் 48 மணி நேரத்திற்குள் அனைத்து பிணைக் கைதிகளின் சடலங்களையும் இஸ்ரேலிடம் ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அதற்கமைய ஹமாஸ் அமைப்பு விரைந்து செயற்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் கடும் அழுத்தத்திற்கு மத்தியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போர் நிறுத்தத்தின் அமைய சிறைப்பிடிக்கப்பட்ட பிணைக் கைதிகள் மற்றும் உயிரிழந்தவர்களின் சடலங்கள் கையளிக்கப்பட்டு வருகின்றன.
எஞ்சியுள்ள பிணைக் கைதிகளின் உடல்களைத் தேடும் பணியில் ஹமாஸ் இயக்கம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
இதுவரை 18 பிணைக் கைதிகளின் சடலங்களை ஹமாஸ் அமைப்பு கையளித்துள்ளது. அத்துடன் இஸ்ரேலிடமிருந்து 195 பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் காணாமல் போன பிணைக் கைதிகளின் சடலங்களைத் தேடும் பணி தீவிரம் அடைந்துள்ள நிலையில், எகிப்து மீட்புக் குழுவொன்றும் இதில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புல்டோசர்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மற்றும் இயந்திரங்களின் உதவியுடன், சடலங்களைத் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
காசா மீதான இஸ்ரேலின் கொடூர தாக்குதல் காரணமாக பல கட்டிடங்கள் நிர்மூலமாகி மலைபோல குவிந்துள்ளதாக ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





