நியூயார்க்கில் அமெரிக்க – சீன வெளியுறவு அமைச்சர்கள் இடையே சந்திப்பு
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) நியூயார்க்கில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியைச் சந்திக்கவிருக்கிறார்.அமெரிக்க வெளியுறவு அமைச்சு இத்தகவலை வெளியிட்டுள்ளது.
சீனாவுக்கான மேம்பட்ட கணினிச் சில்லுத் தொழில்நுட்ப ஏற்றுமதி தொடர்பில் அமெரிக்கா விதித்துள்ள கட்டுப்பாடுகள், வர்த்தக வரிகள், தைவான் விவகாரம், மனித உரிமை விவகாரம், காஸாவிலும் உக்ரேனிலும் நடக்கும் போர்கள் ஆகியவை தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றம் நிலவுகிறது.இந்நிலையில், இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு நடைபெறவிருக்கிறது.
சீன வெளியுறவு அமைச்சர், ஐக்கிய நாட்டுப் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ளார்.சீனப் பொருள்கள் மீதான கூடுதல் வரிகள் அனைத்தையும் விலக்கிக்கொள்ளும்படி சீனா இந்த வாரம் அமெரிக்காவை வலியுறுத்தியது.
ரஷ்யா உக்ரேன் மீது படையெடுத்தது முதற்கொண்டு மாஸ்கோவுடனான பெய்ஜிங்கின் உறவு குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துவந்துள்ளது.தைவானுடனான அமெரிக்காவின் உறவு குறித்து சீனாவும் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகிறது.பனிப்போர் என்ற நிலைக்கும் அப்பால் சீனாவால் அமெரிக்கா சவால்களை எதிர்க்கொள்வதாக அமெரிக்க வெளியுறவுத் துணை அமைச்சர் கர்ட் கேம்பெல் இம்மாதம் கூறினார்.
அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம், சீனாவுடன் பனிப்போரை நாடவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.இருப்பினும் இரு வல்லரசுகளுக்கு இடையிலான உலகளாவிய போட்டி அதிகரிப்பது, புது வகையான பனிப்போரைப்போல் இருப்பதாக ஆய்வாளர்களும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் கருதுகின்றனர்.
இருதரப்பும் அண்மை மாதங்களில் கலந்துரையாடலுக்குத் தயார் என்று கூறியுள்ளன. சீன அதிபர் ஸி ஜின்பிங்குடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விரைவில் தொலைபேசி வழியாகப் பேசத் திட்டமிடுவதாக வெள்ளை மாளிகை சென்ற மாதம் கூறியது.