மூன்று இந்திய அணுசக்தி நிறுவனங்களுக்கு அமெரிக்கா அனுமதி; அணுசக்தி ஒப்பந்தத்திற்கு வாய்ப்பு
மூன்று இந்திய அணுசக்தி நிறுவனங்களைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிறுவனப்பட்டியலில் இருந்து அமெரிக்கா நீக்கியுள்ளது.பாபா அணு ஆராய்ச்சி மையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், இந்திய அரிய கனிமங்கள் லிமிடெட் ஆகியவை அந்த நிறுவனங்கள்.
இந்தியாவின் முன்னணி அணுசக்தி நிறுவனங்களுக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கும் இடையேயான அணுசக்தி ஒத்துழைப்பைத் தடுக்கும் விதிமுறைகளை அமெரிக்கா நீக்கும் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கடந்த வாரம் கூறினார்.
அமெரிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிறுவனப் பட்டியல் என்பது வெளிநாட்டுத் தனி மனிதர்கள், வணிகங்கள் நிறுவனங்களின் பட்டியல் ஆகும். ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள், சில பொருள்கள் தொழில்நுட்பங்களுக்கான உரிமத் தேவைகளுக்கு உட்பட்டவை. அமெரிக்க வர்த்தகத் துறையின் தொழில், பாதுகாப்பு பணியகம்(BIS) இந்தப் பட்டியலைக் கையாள்கிறது.
அமெரிக்காவின் 47வது அதிபராக டோனால்ட் டிரம்ப் பதவியேற்பதற்கு ஐந்து நாள்களுக்கு முன்னதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2005ஆம் ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்- அப்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சந்திப்பைத் தொடர்ந்து இந்தியாவும் அமெரிக்காவும் சிவில் அணுசக்தி தொடர்பில் ஒத்துழைக்க லட்சியத் திட்டத்தை வெளியிட்டன.
வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த அணுசக்தி ஒப்பந்தம் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இறுதியானது.
சிவில் அணுசக்தி தொழில்நுட்பத்தை இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ள அமெரிக்காவை அனுமதிப்பதற்கு இது வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.“இது, அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே அதிக மீள்திறன்மிக்க முக்கியமான கனிமங்கள், சுத்தமான எரிசக்தி விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாக்க உதவும்,” என்று ஏற்றுமதி நிர்வாகத்திற்கான முதன்மை துணை வணிகச் செயலாளர் மேத்யூ போர்மன் கூறினார்.