தைவானுக்கு $295 மில்லியன் மதிப்பிலான ராணுவ உதிரி பாகங்கள் விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல்
தைவானுக்கு 228 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ராணுவ உதிரி பாகங்களை விற்பதற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.செப்டம்பர் 16ஆம் திகதி அவ்வாறு ஒப்புதல் வழங்கியதாக அது கூறியது.
ஒருவேளை சீனா படையெடுத்தால் அதை எதிர்கொள்வதற்கான தயார்நிலையைத் தக்கவைத்துக்கொள்ள இந்த ஒப்புதல் உதவும் என்கிறது தைவானிய ராணுவம்.
அமெரிக்க அரசாங்கத்தின் கையிருப்பிலிருந்து அந்த உதிரி பாகங்கள் தைவானுக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தைவான் எவ்விதச் சிரமமுமின்றி அதன் ஆயுதப்படையில் அவற்றைப் பயன்படுத்த இயலும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.இருதரப்புக்குமிடையே அதிகாரபூர்வ உறவுகள் இல்லாதபோதும் தைவானின் முக்கிய ஆதரவாளராகவும் ஆயுத விநியோகிப்பாளராகவும் விளங்குகிறது அமெரிக்கா.
அமெரிக்காவின் ஆயுத விற்பனை ஒப்புதலுக்குத் தைவானிய பாதுகாப்பு அமைச்சு நன்றி தெரிவித்துக்கொண்டது. ஒரு மாதத்திற்குள் அந்த விற்பனை நடப்புக்கு வரும் என்று எதிர்பார்ப்பதாகவும் அது கூறியது.
சீனாவின் சினமூட்டும் நடவடிக்கைகள் வழக்கமாகிவிட்ட நிலையில் பயிற்சிக்கான இடம் சுருங்கிவிட்டதாகவும் வான்வெளியிலும் கடற்பரப்பிலும் பதிலடி தரும் நேரம் பாதிக்கப்படுவதாகவும் தைவான் சொன்னது.அமெரிக்காவின் இந்த ஒப்புதல், தைவானிய ஆகாயப்படையின் பல்வேறு விமானங்களுக்கான கருவிகளின் பாதுகாப்புக்கும் உதவியாக அமையும் என்று தைவானிய ராணுவம் கூறியது.
தைவான் சீனாவின் ஓர் அங்கம் என்கிறது பெய்ஜிங். அத்துடன், கடந்த ஐந்து ஆண்டுகளில் தைவான் மீதான ராணுவ, அரசியல் நெருக்குதலையும் அதிகரித்து வருகிறது. ஆனால் தைவான் சீனாவின் உரிமைகோரலை நிராகரிக்கிறது.
இந்நிலையில், போர் என்ற அளவிற்குச் செல்லாமலும் அதேவேளையில் தைவானியப் படைகளின் ஆற்றலைச் சோதிக்கும் விதமாகவும் சில நடவடிக்கைகளை மேற்கொள்கிறது சீனா.தைவானியக் கட்டுப்பாட்டில் இருக்கும் கின்மென் தீவுகளுக்கு அருகே கடலோரக் காவற்படையின் சுற்றுக்காவல் போன்ற நடவடிக்கைகளை வழக்கமான இடைவெளியில் அது மேற்கொள்கிறது.