இலங்கையில் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையின் கிழக்கு, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
வடக்கு மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏனைய பகுதிகளில், மாலை அல்லது இரவில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம், கேட்டுக் கொண்டுள்ளது.