மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியது கண்டனத்துக்கு உரியது! இயக்குனர் வெற்றிமாறன் காட்டம்
அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதற்கு இயக்குனர் வெற்றிமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் விடுதலை 2 படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்தை பார்த்த பலரும் வெற்றிமாறனை வாழ்த்தி வருகின்றனர். மேலும் இப்படமும் இதன் முதல் பாகத்தை போலவே அதிக வசூல் பெறும் என எதிறப்பார்க்கப்படுகிறது. வெற்றிமாறனின் வழக்கமான சுவாரசியமான திரைக்கதையுடன் இந்த படமும் ரசிகர்களை கவர்ந்து வருவதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இப்படத்தை பார்ப்பதற்காக இயக்குனர் வெற்றிமாறன் சென்னையில் உள்ள காசி திரையரங்கிற்கு சென்றார். படம் முடிந்த பின்பு செய்தியாளர்களிடம் பேசுகையில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்து பேசியது பற்றி கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு பதில் அளித்த வெற்றிமாறன் அவர் பேசியது தவறு, அது கண்டனத்திற்குரியது எனவும் கூறினார்.
அம்பேத்கர் குறித்து பேசிய அமித்ஷா
பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அரசமைப்பு சட்டம் மீது விவாதம் நடந்து கொண்டிருந்தது. அப்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அனைத்து எதிர்கட்சிகளும் அம்பேத்கர் பெயரை பல முறை முழக்கம் இட்டுக் கொள்வதை வாடிக்கையாக வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
அம்பேத்கர் பெயரை இவ்வாறு உச்சரிப்பதற்கு பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்தால் கூட இவர்கள் அனைவருக்கும் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என கூறினார். இது இந்தியா முழுவதும் சர்ச்சையை கிளப்பியது.
மேலும் இதற்கு எதிர்க்கட்சியினர் உட்பட பல அமைப்புகளும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
முன்னதாக இயக்குனர் பா. ரஞ்சித் மற்றும் லப்பர் பந்து இயக்குனர் தமிழரசன் பச்சை முத்து என பல சினிமா பிரபலங்களும் இதற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். வெற்றி மாறனின் படங்கள் பெரும்பாலும் வெளிப்படையான அரசியலை பேசும் படங்களாகவே இருந்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று வெளியாகியுள்ள விடுதலை படமும் கம்யூனிச சிந்தனைகளை உடைத்து பேசியுள்ளதாகவும், சமூகத்தின் அவல நிலையை அப்படியே பிரதிபலிப்பதாகவும் இருப்பதாக பல ரசிகர்கள் தெரிவித்து வந்தனர்.