பெருவில் கட்டுக்கடங்காத தீ – பயிர்கள், தொல்லியல் தலங்கள் சேதம்
பெரு நாட்டில் கட்டுக்கடங்காத தீயை அணைக்கத் தீயணைப்பாளர்கள் போராடிவருகின்றனர்.தீயால் பயிர்களுக்கும் தொல்பொருள் தலங்களுக்கும் சேதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சில பகுதிகள் பேரிடருக்கு உள்ளானதாக அதிகாரிகள் வியாழக்கிழமை (செப்டம்பர் 19) கூறினர்.
தீயணைப்புப் பணிகளில் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்வதாகத் தீயணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.பலமுறை தீயை அணைத்த பிறகும் மீண்டும் மீண்டும் தீப்பற்றுவதாக அவர்கள் கூறினர்.தீ கட்டுக்கடங்காத நிலையில் தங்களுக்கு உதவி தேவைப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
பெரு அதிபர் டினா பொலுவார்டே, சான் மார்ட்டின், அமேஸோனாஸ் போன்ற பகுதிகளில் 60 நாள் அவசர நிலையைப் புதன்கிழமை அறிவித்தார். தீ மேலும் பரவாமல் தடுப்பதற்கான வளங்களையும் அவர் ஒதுக்கியுள்ளார்.
தேவையான அனைத்தையும் செய்வதாகக் கூறிய பொலுவார்டே, புல்வெளிகளுக்குத் தீ மூட்டும் செயலை நிறுத்தும்படி விவசாயிகளை அவர்கள் கேட்டுக்கொண்டார். தீ கட்டுக்கடங்காமல் பரவ அது வழிவகுக்கும் என்பதை அவர் சுட்டினார்.
பெருவில் இம்முறை ஏறக்குறைய 240 தீச்சம்பவங்கள் பதிவாயின. புதன்கிழமை வரைழான நிலவரப்படி அவற்றில் 80 சதவீத தீச்சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த ஏழு இடங்களுக்குத் தீ பரவியுள்ளதாக பெரு கலாசார அமைச்சு தெரிவித்துள்ளது. ஏறத்தாழ 2,300 ஹெக்டர் பரப்பளவிலான விளைநிலம் கருகியதாகவும் 140 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரபூர்வத் தரவுகள் காட்டுகின்றன.