மத்தியகிழக்கில் நிலவும் பதற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஐநா அழைப்பு
இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் ஓராண்டை எட்டும் வேளையில் ஐக்கிய நாடுகள் மன்ற தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் அமைதிக்கு அழைப்பு விடுத்து உள்ளார்.வன்செயல்களைக் கைவிட்டு, பிணைக் கைதிகளை விடுவிக்குமாறும் அவர் தமது அறிக்கையில் கேட்டுக்கொண்டு உள்ளார்.
2023 அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது பாலஸ்தீப் போராளிக் குழுவான ஹமாஸ் திடீரென தாக்குதல் தொடுத்தது.அதற்குப் பதிலடியாக ஹமாஸின் கோட்டையான காஸாவை இஸ்ரேல் கடுமையாகத் தாக்கத் தொடங்கியது. இன்றுவரை அந்தப் போர் ஓயவில்லை.
அக்டோபர் 7ஆம் திகதியுடன் போர் ஓராண்டை நிறைவுசெய்யும் வேளையில், காஸாவிலம் லெபனானனிலும் அமைதியை ஏற்படுத்துமாறு ஐநா வலியுறுத்தி உள்ளது.
“அக்டோபர் 7 முதல் அதிர்ச்சியளிக்கும் வன்செயல் சம்பவங்களும் ரத்தக்களறியும் தொடர்ந்து வருகின்றன.“துப்பாக்கிகளை மௌனமாக்கும் நேரம் இது என்பதோடு பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கும் இதுவே சரியான தருணம்.“மத்திய கிழக்கு வட்டாரத்தைத் திணற செய்யும் தாக்குதல்களை நிறுத்த வேண்டிய நேரம் இது. அனைத்துலகச் சட்டத்தை மதித்து அமைதியையும் நீதியையும் நிலைநாட்டும் நேரமும் இதுவே,” என்று குட்டரெஸ் தெரிவித்து உள்ளார்.
பிணைக்கைதிகளை உடனடியாக, நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ள அவர், அவர்களை செஞ்சிலுவைச் சங்கத்தினர் சந்திக்க ஹமாஸ் அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் போராளிகள் 251 பேரை பிணை பிடித்த்தனர். அவர்களில் இன்னும் 97 பேரை அந்தப் போராளிகள் விடுவிக்கவில்லை. பிணைக்கைதிகளில் 33 பேர் உயிரிழந்துவிட்டதாக இஸ்ரேலிய ராணும் தெரிவித்து உள்ளது.
“ஓராண்டுக்கு முன்னர் தொடங்கிய படுபயங்கரமான தாக்குதல்கள் காஸாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு சொல்லவொண்ணாத் துயரத்தைத் தந்து வருகிறது. அது இப்போது விரிவடைந்து லெபனான் மக்களின் வாழ்க்கையையும் சிதறடித்து வருகிறது,” என்று குட்டரெஸ் தமது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.