ரோஹிங்யா அகதிகள் படகை மீட்க இந்தோனீசியாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ள ஐநா
ஐக்கிய நாட்டு நிறுவன (ஐநா) அகதிகள் அமைப்பு, இந்தோனீசியக் கரைக்கருகே தத்தளிக்கும் ரோஹிங்யா அகதிகள் படகை மீட்கும்படி அந்நாட்டு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.குழந்தைகள், பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் அந்தப் படகில் இருப்பதாக நம்பப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக மியன்மாரில் ரோஹிங்யா சமூகத்தினருக்கு எதிரான வன்செயல்கள் மோசமான நிலையில், ஒவ்வோர் ஆண்டும் பல்லாயிரக்கணக்கான ரோஹிங்யா அகதிகள் உயிரைப் பணயம் வைத்து மலேசியா அல்லது இந்தோனீசியாவிற்குப் படகுகளில் செல்கின்றனர்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் இருப்பதாக நம்பப்படும் படகு, இந்தோனீசியாவின் அச்சே மாநிலக் கரையிலிருந்து ஏறக்குறைய ஆறு கிலோமீட்டர் தொலைவில் நங்கூரமிட்டிருந்தது. அக்டோபர் 21ஆம் திகதி, நிவாரணப் படகு மூலம் அது 1.6 கிலோமீட்டருக்குக் குறைவான பகுதிக்கு இழுத்துவரப்பட்டது.
இவ்வேளையில் படகில் இருப்போரை மீட்டு அவர்கள் பாதுகாப்பாகத் தரையிறங்குவதை உறுதிசெய்யும்படி அதிகாரிகளிடம் இந்தோனீசியாவில் செயல்படும் ஐநா அகதிகள் அமைப்பு கேட்டுக்கொண்டது.அவர்களுக்குத் தேவையான உதவியை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அது கூறியது.
அக்டோபர் 17ஆம் திகதி ரோஹிங்யாக்கள் ஐவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக இந்தோனீசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் ஒருவர் படகிலேயே உயிரிழந்துவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
அகதிகளுக்குப் புகலிடம் தரும்படித் தன்னைக் கட்டாயப்படுத்த முடியாது என்பதைச் சுட்டிய இந்தோனீசியா அண்டை நாடுகள் இந்தச் சுமையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கூறுகிறது.