ரஷ்யாவில் உக்ரேனிய ட்ரோன் தாக்குதலால் இரு மது உற்பத்தி தொழிற்சாலைகள் சேதம்
ரஷ்யாவின் துலா பகுதியில் உக்ரேன் நடத்திய ஆளில்லா வானூர்தித் தாக்குதலில் மது உற்பத்தி செய்யும் இரண்டு தொழிற்சாலைகள் சேதமடைந்ததாகக் கூறப்பட்டுள்ளது.துலா ஆளுநர் டிமிட்ரி மிலியயெவ் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 22) இத்தகவலை வெளியிட்டார்.
ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவிற்குத் தெற்கே அமைந்துள்ளது துலா.
முதற்கட்டத் தகவல்களின்படி தாக்குதலில் யாரும் பாதிக்கப்படவில்லை என்று ஆளுநர் டெலிகிராம் பதிவில் கூறினார்.“சம்பவ இடங்களில் அவசரகால சேவைப் பிரிவின் வல்லுநர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலைமை கட்டுக்குள் இருக்கிறது,” என்றார் அவர்.
சேதமடைந்த தொழிற்சாலைகள் யெஃப்ரெமோவ் நகரிலும் லுஸ்கோவ்ஸ்கியி கிராமத்திலும் அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. சேதம் குறித்த தெளிவான தகவல் இல்லை.
இந்நிலையில், ரஷ்யா-உக்ரேன் எல்லையில் உள்ள ரஷ்யாவின் மேற்குப் பகுதி நகரான பிரையன்ஸ்க்கிலும் உக்ரேன் ஆளில்லா வானூர்தித் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொதிகலன் ஆலை ஒன்றும் கட்டடம் ஒன்றும் சேதமடைந்ததாக அப்பகுதியின் ஆளுநர் அலெக்ஸாண்டர் போகோமாஸ் டெலிகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.தாக்குதலில் யாரும் காயமடையவில்லை என்றார் அவர்.
ரஷ்ய ஆகாயப் படையினர் ஆறு உக்ரேனிய ஆளில்லா வானூர்திகளை அழித்ததாக அவர் சொன்னார்.
தகவல்களை உறுதிப்படுத்த இயலவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.