மாஸ்கோவில் இரவு முழுவதும் ட்ரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன் – 5 பேருக்கு காயம்
மாஸ்கோ பிராந்தியத்தின் கிராஸ்னோகோர்ஸ்க்(Krasnogorsk) நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இரவு முழுவதும் நடத்தப்பட்ட உக்ரைனின் ட்ரோன் தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட ஐந்து பேர் காயமடைந்ததாக பிராந்திய ஆளுநர் ஆண்ட்ரி வோரோபியோவ் இன்று(24) தெரிவித்தார்.
மாஸ்கோ பிராந்தியத்தில் ஒன்று உட்பட 111 உக்ரேனிய ட்ரோன்களை விமானப் பாதுகாப்புப் படைகள் இடைமறித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்று காலை முன்னதாக, தலைநகரை குறிவைத்த மூன்று ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்தார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக ரஷ்யாவின் பெடரல் விமானப் போக்குவரத்து நிறுவனம் இன்று காலை இரு மாஸ்கோ விமான நிலையங்களில் விமானங்களை தற்காலிகமாக தடை செய்தது, சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு கட்டுப்பாடுகளை நீக்கியது.
இதற்கிடையில், உக்ரேனிய விமானப்படை இரவு முழுவதும் 72 ரஷ்ய போர் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது.





