ரஷ்ய கடற்கரையைத் ட்ரோட் மூலம் தாக்கிய உக்ரேன்; ரஷ்ய வீரர் உட்பட மூவர் பலி

ரஷ்யாவின் குர்ஸ்க் கடற்கரையை உக்ரேன் தாக்கியதில் ரஷ்ய பாதுகாப்புப் படை வீரர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர், ஏழு பேர் காயமடைந்தனர் என்று வட்டார ஆளுநர் அலெக்சாண்டர் கின்ஷ்டீன் புதன்கிழமை தெரிவித்தார்.
டெலிகிராமில் வெளியிட்ட தகவலில், உக்ரேனின் எல்லையோரமாக குடும்பங்கள் அடிக்கடி வந்து செல்லும் பகுதியில் இந்தத் தாக்குதலை உக்ரேன் வேண்டுமென்றே நடத்தியதாக அவர் கூறினார்.
“காயமடைந்த ஐந்து வயது குழந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்தவர்களில் தேசியப் பாதுகாப்புப் படை வீரரும் ஒருவர். சம்பவத்தன்று மக்களை அங்கிருந்து வெளியேற்ற முயற்சி செய்தபோது அவர் உயிரிழந்தார்.
“ஆளில்லா வானூர்தி மூலம் தாக்குதல் நடத்தப்படுவதாக மக்கள் புகார் தெரிவிக்க ஆரம்பித்ததும் அவர் சக வீரர்களுடன் அங்கு சென்றார். இரண்டாவது வெடிப்புச் சத்தம்கேட்டபோது அந்த சார்ஜெண்ட் மக்களை வெளியேற்ற முயற்சித்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் உயிர்பிழைக்கவில்லை,” என்று ஆளுநர் குறிப்பிட்டார்.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அவரது கூற்றை தன்னிச்சையாக சரிபார்க்க முடியவில்லை.உக்ரேனிய அதிகாரிகளும் தாக்குதல் குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
ரில்ஸ் நகரில் உள்ள ஒரு மருத்துவனையையும் உக்ரேன் வானூர்தி மூலம் தாக்கியதாகவும் இதில் இரண்டு பேர் காயமடைந்ததாகவும் சன்னல்கள் உடைந்து மேற்கூரை தீப்பற்றி எரிந்ததாகவும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.