ஹார்முஸ் நீரிணைக்கு போர்க்கப்பல்களை அனுப்புவதில் பிரித்தானியாவுக்கு எச்சரிக்கை தேவை
ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்காகப் போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்பதற்கு முன்பு, பிரித்தானியா சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என முன்னாள் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு செயலாளர் சர் மால்கம் ரிஃப்கைண்ட் (Sir Malcolm Rifkind) எச்சரித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இந்த கோரிக்கை குறித்து ‘ட்ரெவர் பிலிப்ஸ்’ (Trevor Phillips) நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது.
இதில் முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத் தலைவர் ஆஷ்டன் மற்றும் மூத்த பத்திரிகையாளர் மார்க் அர்பன்
ஆகியோருடன் சர் மால்கம் ரிஃப்கைண்ட் (Sir Malcolm Rifkind) கலந்துகொண்டார்.
இதன்போது கருத்து தெரிவித்த ரிஃப்கைண்ட், பின்வரும் முக்கிய கருத்துகளை முன்வைத்தார்.
“போர்க்கப்பல்களை அனுப்பும் டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கை வெறும் அரசியல் பேச்சுதானா (Rhetoric) அல்லது ஆழமாகப் பரிசீலிக்கப்பட்ட திட்டமா என்பதை இங்கிலாந்து ஆராய வேண்டும்.
வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்துவதும், நீரிணையைத் தடுப்பதும் எதிர்பார்க்கப்பட வேண்டிய ஒன்றுதான். இதற்கான திட்டமிடல் முன்கூட்டியே இருந்திருக்க வேண்டும்.
மோதலின் முதல் சில நாட்களில் அமெரிக்காவின் நிலைப்பாடு சுவாரஸ்யமாக இருந்தபோதிலும், தற்போதைய சூழலில் பிரித்தானியா அவசரப்பட்டு முடிவெடுக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பிரித்தானியா தனது பாதுகாப்புக் கொள்கையில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.” என்றார்.





