க்ரோக் ஏஐ (Grok AI ) விவகாரம்: மஸ்க்கிற்கு பிரித்தானியா கடும் எச்சரிக்கை!
இலான் மஸ்க்கின் X (ட்விட்டர்) தளத்தில் உள்ள க்ரோக் ஏஐ (Grok AI) மூலம் உருவாக்கப்படும் ஆபாசமான ‘டீப்ஃபேக்’ (Deepfake) புகைப்படங்கள் குறித்துப் பிரித்தானிய அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், அவற்றை உடனடியாகக் கையாள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
பிரித்தானிய தொழில்நுட்பத் துறை அமைச்சர் லிஸ் கெண்டல் (Liz Kendall), க்ரோக் ஏஐ (Grok AI ) மூலம் பெண்களின் புகைப்படங்களை அவர்களின் அனுமதியின்றி ஆபாசமாக மாற்றுவதை “அருவருப்பானது (Appalling)” என்று கூறினார். மேலும், “நாகரீக சமூகத்தில் ஏற்க முடியாத ஒன்று” என்று கடுமையாகச் சாடியுள்ளார். குறிப்பாக, பெண்களையும் சிறுமிகளையும் இலக்காகக் கொண்டு உருவாக்கப்படும் இந்த இழிவான படங்கள் பரவுவதை அனுமதிக்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.
சமீபத்திய அப்டேட்டிற்குப் பிறகு, க்ரோக் ஏஐ (Grok AI )ல் உள்ள ‘இமேஜ் எடிட்டிங்’ வசதியைப் பயன்படுத்தி, சாதாரண புகைப்படங்களை ஆபாசமாக மாற்றும் போக்கு அதிகரித்துள்ளது. ஒரு ஆய்வின்படி, 10 நிமிட இடைவெளியில் மட்டும் சுமார் 100-க்கும் மேற்பட்ட முறை இதுபோன்ற ஆபாசப் படங்கள் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பிரித்தானிய ஊடக ஒழுங்கு முறை அமைப்பான Ofcom, இது தொடர்பாக X மற்றும் xAI நிறுவனங்களைத் தொடர்பு கொண்டுள்ளது. பயனர் பாதுகாப்பிற்காக அந்த நிறுவனங்கள் எடுத்துள்ள சட்டப்பூர்வ நடவடிக்கைகள் என்ன என்பதை விளக்குமாறு கேட்டுள்ளது. முறையான பதில் இல்லையெனில், கடும் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற விமர்சனங்கள் எழுந்ததையடுத்து, இலான் மஸ்க் தனது X பக்கத்தில் பதிவிட்டார். “க்ரோக் ஏஐ (Grok AI )-ஐப் பயன்படுத்திச் சட்டவிரோதமான உள்ளடக்கங்களை உருவாக்குபவர்கள், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் சந்திக்கும் அதே விளைவுகளை (தண்டனைகளை) சந்திக்க நேரிடும்,” என்று அவர் கூறினார்.
X நிறுவனத்தின் பாதுகாப்புப் பிரிவு, இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்படும் என கூறியுள்ளது. மேலும், சட்ட அமலாக்கத் துறையுடன் இணைந்து செயல்படுவோம் என்றும் தெரிவித்துள்ளது.
பிரித்தானிய அரசு, அனுமதி இல்லாமல் டீப்ஃபேக் ஆபாசப் படங்களை உருவாக்குபவர்களுக்குச் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் வகையில் நட்டிபிகேஷன் (‘Nudification’ எதிர்ப்புச் சட்டங்களைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.





