உகண்டாவில் தேர்தல் பதற்றம்: நாடு தழுவிய ரீதியில் இணையச் சேவைகள் முடக்கம்
உகண்டாவில் நாளை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை முன்னிட்டு, நாடு முழுவதும் இணையம் மற்றும் கையடக்கத் தொலைபேசி சேவைகள் அதிரடியாக முடக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி யோவேரி முசவேனிக்கு (Yoweri Museveni) எதிராகப் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
எட்டாவது முறையாகப் போட்டியிடும் 81 வயதான முசவேனியின் நீண்டகால ஆட்சிக்கு எதிராக இளைஞர்களும் எதிர்க்கட்சியினரும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்கவே இணையம் துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினாலும், போராட்டங்களை ஒடுக்கவே இந்த முயற்சி எனப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தகவல் பரிமாற்றம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ள நிலையில், தேர்தல் நியாயமான முறையில் நடக்குமா என்ற அச்சம் சர்வதேச அளவில் எழுந்துள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை இந்தக் கட்டுப்பாடுகள் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.





