இலங்கையில் இளைஞர்கள் இருவர் கடத்தி செல்லப்பட்டு துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

கஹவத்தை பொலிஸ் எல்லைக்குட்பட்ட கஹவத்தை வீதியில் நேற்று இரவு 22 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட இளைஞர் கஹவத்தை, புங்கிரியா பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்த இளைஞருடன் இருந்த மற்றொரு இளைஞரும் ஜீப்பில் கடத்தப்பட்டுள்ளனர். பின்னர், இரண்டு இளைஞர்களையும் வாகனத்தில் சில கிலோமீட்டர் தொலைவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அங்கு வீதியில் இறக்கி இருவர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு ஜீப்பில் வந்தவர்கள் தப்பி சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான மற்றொரு இளைஞர் கஹவத்தை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் கும்பல் குறித்து பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக தெரியவந்துள்ளது.