இந்தியச் சிறையிலிருந்து மியன்மாரை சேர்ந்த பெண் கைதிகள் இருவர் தப்பியோட்டம்
மிசோரம் மாநிலத்தின் சிறையிலிருந்து இரண்டு மியன்மார் நாட்டு பெண் கைதிகள் தப்பியோடியுள்ளனர்.
கிழக்கு மிசோரமில், மியன்மார் நாட்டுடனான இந்திய எல்லை அமைந்திருக்கும் சம்பாய் மாவட்டத்திலுள்ள சிறையிலிருந்து மியன்மாரைச் சேர்ந்த இரண்டு பெண் கைதிகள் தப்பியோடியுள்ளதாக வியாழக்கிழமை (டிசம்பர் 19) அம்மாநில காவல்துறையினர் தெரிவித்தனர்.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட மியன்மாரைச் சேர்ந்த வன்சுயேனி (எ) சுயினுஃபேலி (36), மற்றும் லால்சான்மாவி (44) ஆகிய இருவரும் தகர ஓடுகளினால் செய்யப்பட்ட சிறைக் கழிவறையிலிருந்து தப்பியதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி அய்சுவாலிலுள்ள பெண்களுக்கான மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த லால்சான்மாவி அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
பின்னர், ஹெராயின் வைத்திருந்த நால்வர் கைது செய்யப்பட்ட போது அவர்கள் அந்த போதைப்பொருளைத் தப்பியோடிய லால்சான்மாவியிடம் வாங்கியதாகக் கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு மே 11ஆம் திகதி அவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருந்தார்.
தற்போது அவர் மீண்டும் வேறொரு பெண் கூட்டாளியுடன் தப்பியோடியது குறித்து சம்பாய் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.