பிரான்ஸில் இருந்து பிரித்தானியா வர முயன்ற இரு பெண்கள் பலி!
பிரான்ஸில் இருந்து ஆங்கிலக் கால்வாயை கடந்து பிரித்தானியாவிற்கு செல்ல முயன்ற இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர். பிரெஞ்சு அதிகாரிகள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.
தாழ்வெப்பநிலை (hypothermia) காரணமாக ஏற்பட்ட மாரடைப்பால் அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த இருவரும் பவுலோனில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டப்போதும் காப்பாற்ற முடியாமல்போனதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கிடையே ஆங்கிலக்கால்வாயை கடந்த 60 இற்கும் மேற்பட்டோர் ஒரே இரவில் மீட்கப்பட்டதாகவும் கடலோர காவல்படையினர் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறான ஆபத்தான பயணத்தின் காரணமாக இந்த ஆண்டில் மாத்திரம் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சட்டவிரோத புலம்பெயர்வோரை கட்டுப்படுத்த பிரித்தானியா பல வழிகளில் முயற்சித்து வருகிறது. குறிப்பாக பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா இடையே one in – one out ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. இதன் ஊடாக பிரித்தானியாவில் இருந்து நபர் ஒருவர் பிரான்ஸிற்கு நாடு கடத்தப்பட்டிருந்தார்.
அதேபோல் பிரான்ஸில் இருந்து சிறிய குடும்பம் ஒன்று பிரித்தானியாவிற்கு அழைத்துவரப்பட்டிருந்தது. இருப்பினும் ஆபத்தான பயணங்களை மேற்கொள்வோரின் எண்ணிக்கை மாத்திரம் குறைந்தபாடில்லை.
இது தற்போது ஆட்சியில் உள்ள தொழிற்கட்சி அரசாங்கத்திற்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.





