சீனாவில் மண்வெட்டியால் சக மாணவரைக் கொன்ற பதின்ம வயதினர் இருவருக்கு சிறை தண்டனை
சீனாவில் கடந்த மார்ச் மாதம் சக மாணவனைக் கொலை செய்த பதின்ம வயதினர் இருவருக்கு நீண்டகாலச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அந்நாட்டு அரசாங்க ஊடகமான ‘சிசிடிவி’, டிசம்பர் 30ஆம் திகதி இதைத் தெரிவித்தது.
தண்டிக்கப்பட்ட இளைஞர்கள் இருவரும் மண்வெட்டியால் சக மாணவரைக் கொன்றனர். இந்த வழக்கு, இளங்குற்றவாளிகளின் குற்றச்செயல்கள் குறித்துப் பொதுமக்களிடையே காரசாரமான விவாதத்தைத் தூண்டியது.
சாங், லி எனும் குடும்பப் பெயர்களைக் கொண்ட இளையர்கள் இருவருக்கும் முறையே ஆயுள்தண்டனையும் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
ஹெபெய் மாநிலத்தைச் சேர்ந்த ஹண்டான் நகர நீதிமன்றம், வேண்டுமென்றே கொலை செய்த குற்றத்துக்காக அவர்களுக்குத் தண்டனை விதித்ததாகக் கூறப்பட்டது. இருப்பினும் கொலைக்கான நோக்கம் குறித்துத் தகவல் வெளியிடப்படவில்லை.அவர்கள் மிக மோசமான சூழலில், கொடூரமான முறையில் கொலை செய்ததாக நீதிமன்றம் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்பட்ட, மா எனும் குடும்பப் பெயர் கொண்ட மூன்றாவது இளைஞருக்குச் சிறப்புத் திருத்தக் கல்வி விதிக்கப்பட்டுள்ளது. இது சட்டரீதியான தண்டனை என்று ‘சிசிடிவி’ கூறியது.
தண்டிக்கப்பட்ட மூவருக்கும், சம்பவம் நடந்தபோது வயது 13.
கொல்லப்பட்ட வோங் எனும் குடும்பப் பெயருடைய 13 வயது மாணவனின் சடலம் கடந்த மார்ச் 10ஆம் திகதி கிடைத்தது. நகரின் எல்லையில் கைவிடப்பட்ட வீடு ஒன்றில் அதிக ஆழமற்ற குழியில் அவரது உடல் புதைக்கப்பட்டிருந்தது.
சந்தேகத்துக்குரிய மூவரும் மறுநாள் கைது செய்யப்பட்டனர். கொலைக்கான சதித்திட்டத்தைத் தீட்டியதும் மண்வெட்டியால் சிறுவனைக் கொன்றதும் வோங் என்றும் லி அவருக்குக் கொலையிலும் உடலைப் புதைப்பதிலும் முக்கிய உடந்தையாகச் செயல்பட்டார் என்றும் கூறப்பட்டது. மா அவர்களுடன் இருந்தபோதும் கொலையில் ஈடுபடவில்லை எனத் தெரிகிறது.
சீனாவில் இளங்குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதில்லை.இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட நான்கு சிறுவர்களுமே, நகரங்களில் வேலைசெய்யச் சென்ற பெற்றோரால் உறவினர் கவனிப்பில் விட்டுச்செல்லப்பட்டவர்கள் என்று கூறப்பட்டது.