ஜப்பானில் இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் : ஒருவர் பலி!
உலக நாடுகள் பலவும் சமீப காலமாக நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஜப்பான் நாட்டின் இஷிகாவா மாகாணத்தில் தற்போது ஒரே நாளில் அடுத்தடுத்து 2 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
இதில் முதல் நிலநடுக்கமானது கடலுக்கு அடியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின.
இதனை அடுத்து குறித்த பகுதியில், இரண்டாவது முறையும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த முறை கடலுக்கு அடியில் சுமார் 12 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக இருந்ததால் இதில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் கடுமையான அதிர்வினை உணர்ந்ததாக தெரிவித்தனர்.
குறித்த நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,. 22 பேர் படுகாயம் அடைந்தனர். மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.