முடி மாற்று அறுவை சிகிச்சையால் உயிரிழந்த இருவர் – பல மாதங்களுக்குப் பிறகு மருத்துவர் சரணடைவு

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரை சேர்ந்தவர் அனுஷ்கா திவாரி. இவரது கணவர் சவுரப் திரிபாதியும் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
இவர்கள் இருவரும் சேர்ந்து ராவத்பூர் பகுதியில் எம்பயர் கிளினிக் எனும் மருத்துவமனையை நடத்தி வந்துள்ளனர்.
இந்த மருத்துவமனையில் கடந்த மார்ச் 13 ஆம் தேதி 39 வயதான வினீத் துபே முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், இதனால், துபே உயிரிழந்துவிட்டதாகவும் வினீத்தின் மனைவி ஜெயா முதலமைச்சர் பிரிவுக்கு ஆன்லைனில் புகார் அளித்துள்ளார்.
துபேயின் வழக்கு வெளிச்சத்துக்கு வந்தநிலையில், குஷாக்ரா கட்டியார் என்பவர் தாமாக முன்வந்து காவல் ஆணையர் அகில் குமாரிடம் மருத்துவமனைமீது புகார் அளித்தார்.
தனது சகோதரரும் மென்பொருள் பொறியாளருமான மாயங்கிற்கும் கடந்த நவம்பர் 18 ஆம் தேதி எம்பயர் மருத்துவமனையில் தலைமுடி மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டதாகவும், சில மணி நேரங்களுக்குப் பிறகு அவருக்கு மார்பு வலி மற்றும் முகத்தில் வீக்கம் ஏற்பட்டநிலையில் மறுநாளே இறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
புகாரை அடுத்து முடி மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தவர்களை கைது செய்யச் சென்றபோது, டாக்டர் திவாரி காணாமல் போனார்.
இந்த வழக்கை விசாரித்து வரும் கூடுதல் டி.சி.பி. மேற்கு விஜேந்திர திவேதி கூறியதாவது, அறுவை சிகிச்சையின் போது வினீத் துபேக்கு தொற்று ஏற்பட்டதாகவும், இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாததால், அவரது உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்ததாகவும் கூறியுள்ளார்.
“அனுஷ்கா திவாரி மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. அனுஷ்கா திவாரி அறுவை சிகிச்சை செய்துள்ளார், இது அவரது துறைக்கு தொடர்பில்லாதது. இது தொடர்பாக எங்களிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன. காகதேவ் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் பார்வையில் அனுஷ்கா திவாரி குற்றவாளி. இன்று டாக்டர் அனுஷ்கா திவாரி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். அவர் சரணடைந்த பிறகு, அவர் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்,” என்று அரசு வழக்கறிஞர் திலீப் சிங் குறிப்பிட்டார்.