அமெரிக்காவில் மோதல் ஏற்படும் வகையில் பறந்த இரு பயணிகள் விமானம்; FAA விசாரணை
அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் நடுவானில் இரு பயணிகள் விமானம் மோதல் ஏற்படும் வகையில் பறந்தது குறித்து அமெரிக்காவின் மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) விசாரணையைத் தொடங்கியது.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டில் ஏற்பட்ட தவறு காரணமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது.கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்ட பயணிகள் அந்த இரு விமானங்களில் இருந்ததாக அறியப்படுகிறது.
இந்த ஆபத்தான சம்பவம் குறித்து நியூயார்க்கின் சைராகஸ் காவல்துறையினர் வெளியிட்ட காணொளியில், அந்த இரு விமானங்களில் ஒன்று தரையிறங்கும் நிலையிலும் மற்றொன்று புறப்பட்ட நிலையிலும் இருப்பதைக் காண முடிந்தது.இந்தச் சம்பவம் ஜூலை 8 ஆம் திகதி உள்ளூர் நேரப்படி காலை 11.50 மணியளவில் நடந்ததாக சிபிஎஸ் நியூஸ் தெரிவித்தது.
அமெரிக்கன் ஏர்லைன்சின் வட்டாரக் கிளை நிறுவனத்தால் இயக்கப்படும் அமெரிக்கன் ஈகல் விமானம் 5511, டெல்டா ஏர்லைன்சின் வட்டாரக் கிளை நிறுவனமான எண்டெவர் ஏர் மூலம் இயக்கப்படும் டெல்டா கனெக்ஷன் விமானம் 5421 ஆகிய இரு விமானங்கள் இந்த மோதல் போக்கில் ஈடுபட்டன.இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக எஃப்ஏஏ கூறியது.
“எல்லாவற்றுக்கும் மேலாகப் பாதுகாப்பிற்கான உறுதிப்பாட்டில் நாங்கள் எப்போதும் செய்வது போல், எண்டெவர் ஏர் விமான நிறுவனமும் டெல்டா கனெக்ஷன் விமான நிறுவனமும் விமானத்துறை அதிகாரிகளுடன் இணைந்து செயல்படும்,” என சிபிஎஸ் நியூஸ்சிடம் டெல்டா விமான நிறுவனம் தெரிவித்தது.இந்தச் சம்பவம் குறித்துக் கருத்து தெரிவிக்க அமெரிக்க ஏர்லைன்ஸ் மறுத்துவிட்டது.