அமீபா தெற்றால் கேரளாவில் மேலும் இருவர் மரணம்

மூளையைத் தின்னும் அமீபாத் தொற்றால் கேரளாவில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
அமீபிக் மூளைக்காய்ச்சல் என்ற அரிய வகை தொற்று பாதிப்பால் ஆகஸ்ட் மாதம் மூவர் இறந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகக் கேரளாவில் இந்த அமீபா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் ஆகஸ்ட் 4ஆம் தேதி அமீபா பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்ட மூன்று மாதக் குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக இன்று (செப்டம்பர் 1) தெரிவிக்கப்பட்டது. மலப்புரம் பகுதியைச் சேர்ந்த 52 வயது ராம்லா என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அமீபா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் எட்டுப் பேர் கோழிக்கோடு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த அமீபா நன்னீரில் மட்டுமே உயிர் வாழ்கிறது, உப்புநீரில் இருப்பதில்லை. அசுத்தமான நீரை குடிக்கும்போது பரவாது.
சுத்தம் இல்லாத ஆறு, ஏரி, குளம், குட்டைகளில் குளிக்கும்போது மூக்கின் வழியாக மட்டுமே உடலுக்குள் இக்கிருமி நுழைகிறது. நீச்சல் குளங்களிலும் இருக்கலாம். சுத்தமில்லாத தண்ணீரைக் கொண்டு முகத்தைக் கழுவும்போதுகூட மூக்கின் வழியாக நுழையலாம்.
நரம்புகள் வழியாக மூளைக்குள் நுழைந்து மூளையின் திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்துகிறது.காய்ச்சல், தலைவலி, வாந்தி, மூக்கிலிருந்து சளி வெளியேறுதல், கழுத்து இறுக்கம், குழப்பமான நிலை, வலிப்பு, மயக்கம் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும்.