பாங்காக்கில் இரு மலேசிய சுற்றுலாப் பயணிகள் தீ வைத்து எரிக்கப்பட்டனர்; சந்தேக நபர் காவலில்

தாய்லாந்தின் தலைநகர் பேங்காக்கில் வேலையில்லாத நபர் ஒருவர் தீ மூட்டியதில் மலேசியச் சுற்றுப்பயணிகள் இருவர் படுகாயமடைந்தனர்.
அந்தச் சம்பவம் இம்மாதம் 7ஆம் தேதி இரவு 10 மணியளவில் ரட்சதம்ரி சாலையில் நிகழ்ந்தது. முன்னாள் குத்துச்சண்டை வீரர் என்று நம்பப்படும் சந்தேக நபர் சுற்றுப்பயணிகளுக்குப் பின்னால் இருந்து வந்து அவர்கள்மீது தின்னர் என்ற திரவத்தை ஊற்றியதாகக் கூறப்படுகிறது.
அந்தச் சமயத்தில் மலேசியர்களான 26 வயது ஓங், 27 வயது கான் ஆகியோர் கடைத்தொகுதிக்கு அருகில் உள்ள படிக்கட்டில் அமர்ந்திருந்தனர்.திரவம் ஊற்றப்பட்டதை அடுத்து சுற்றுப்பயணிகள் இருவரும் ஓட்டம் பிடித்தனர். ஆனால் சந்தேக நபர் அவர்களைத் துரத்திச் சென்று தீ மூட்டியதாக நம்பப்படுகிறது.
தாய்லாந்தில் உள்ள மலேசியத் தூதரகத்தின் தற்காலிக தூதர் போங் யிக் ஜுய், கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தபோதும் சீரான நிலையில் உள்ள சுற்றுப்பயணிகளை நேரில் சென்று சந்தித்தார்.
ஓங், காவல்துறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் கான் கிங் சுலாலொங்கோர்ன் மெமோரியல் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் என்றும் போங் தெரிவித்தார்.
“ஓங்கிற்கு மேல் உடலில் முன்னும் பின்னும் இரண்டாம் நிலை தீக்காயங்கள் ஏற்பட்டன,” என்ற போங், அவர்களின் காயம் கடுமையானதாகக் கருதப்பட்டாலும் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றார்.கானுக்கு 36% இரண்டாம் நிலை தீக்காயங்கள் ஏற்பட்டன என்ற போங், அவரது நிலை சீராகவும் அவர் சுயநினைவுடனும் இருப்பதைக் குறிப்பிட்டார்.சம்பவம் குறித்து தகவல் திரட்ட தூதரகம் ஓங், கான் ஆகியோரின் குடும்பங்களைத் தொடர்புகொண்டுள்ளது.
லம்பினி காவல் நிலையத்தின் கண்காணிப்பாளர் காவல்துறை கல்னல் யிங்யோஸ் சுவன்னோ, தீ மூட்டிய சந்தேக நபர் சா காயோ மாநிலத்தைச் சேர்ந்த 30 வயது நபர் என்று நம்பப்படுவதாகக் கூறினார். வேலை கிடைக்காத விரக்தியில் நபர் அவ்வாறு செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
தீ மூட்டியதை அடுத்து சம்பவ இடத்திலிருந்து தப்பியோட முயன்ற நபரைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்.லம்பினி காவல் நிலையத்தில் நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.விசாரணை தொடர்கிறது