கீத் நொயர் கடத்தல் தொடர்பாக இரு முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரிகள் கைது

2008 மே மாதம் ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இலங்கை இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, 2008 மே மாதம் ஊடகவியலாளர் கீத் நொயர் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுத் துறை (CID) அதிகாரிகளால் நேற்று (01) நவகத்தேகம மற்றும் எலயபத்துவ பொலிஸ் பிரிவுகளில் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
2008 மே 22 அன்று தெஹிவளை பொலிஸ் பிரிவின் வைத்தியா வீதி பகுதியில் வேனில் கடத்தப்பட்டு ஊடகவியலாளர் கீத் நொயர் தாக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 42 மற்றும் 46 வயதுடைய இராணுவ புலனாய்வுப் படையணியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ புலனாய்வுப் பிரிவு (MIC) அதிகாரிகள் இருவரும் நவகத்தேகம மற்றும் உலுக்குளம் பகுதிகளில் வசிக்கின்றனர்.
சம்பவம் குறித்து CID மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.