கம்போடியாவில் போர்க்கால பழைய கையெறிகுண்டு வெடித்ததில் இரு குழந்தைகள் பலி

கம்போடியாவில் போர்க்காலத்தில் புதைக்கப்பட்ட பழைய கையெறிகுண்டு வெடித்ததில் இரு குழந்தைகள் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) தெரிவித்தனர்.
தென்மேற்கில் சியாம் ரீப்பில் உள்ள ஒரு கிராமத்தில் சனிக்கிழமை அக்குண்டு வெடித்தது.
1980களிலும் 1990களிலும் அப்பகுதியில் ஒரு கட்டத்தில் கம்போடிய அரசாங்க வீரர்களுக்கும் கெமர் ரூஜ் போராளிகளுக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டது.இதனால், அவ்வட்டாரத்தில் உள்ள சில இடங்களில் பழைய கையெறிகுண்டுகள் புதைந்துகிடக்கின்றன.
சம்பவ இடத்தில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர் என்றும் மணலைத் தோண்டியபோது கையெறிகுண்டு வெடித்திருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வருவதாக அரசாங்கத்தின் சுரங்க நடவடிக்கை நிலைய இயக்குநர் ஹெங் ராட்டானா தெரிவித்தார்.
ஒரு குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்ததாகவும் மற்றொரு குழந்தை மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் அவர் கூறினார்.
“போர் முழுமையாக முடிந்து 25 ஆண்டுகளுக்குமேல் அமைதி நிலவுகிறது. ஆனால், போரின்போது புதைக்கப்பட்ட கண்ணிவெடி, கையெறிகுண்டுகள் கம்போடிய மக்களின் உயிரைத் தொடர்ந்து பறித்து வருகின்றன,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
வெளிநாடுகளுக்கான நிதியுதவிகள் 90 நாள்கள் நிறுத்தி வைக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளதால் கம்போடியா, கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை பல வாரங்களுக்கு நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது. இந்த நிலையில் புதைந்திருந்த கையெறிகுண்டு வெடித்தில் இரு குழந்தைகள் உயிரிழந்தன.