ஆஸ்திரேலியாவில் முகமூடி அணிந்த கும்பல் தாக்கியதில் இரு சிறுவர்கள் மரணம்

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில், வெட்டுக்கத்தி ஏந்திய முகமூடி கும்பல் ஒன்று 12, 15 வயதுடைய இரண்டு சிறுவர்களைக் கத்தியால் குத்திக்கொன்றதாகக் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 7) தெரிவித்தது.
மேற்கு மெல்பர்னில், சந்தேகத்திற்குரிய இளையர் கும்பலைச் சேர்ந்த ஏறக்குறைய எட்டு பேர், இரண்டு சிறுவர்களையும் சனிக்கிழமை மாலை தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் தாக்கியதாகக் காவல்துறை கூறியது.
முதலில், ஒரு தெருவில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் 12 வயதுச் சிறுவன் கிடந்ததை அறிந்ததாக விக்டோரியா மாநிலக் காவல்துறை ஆய்வாளர் கிரஹாம் பேங்க்ஸ் கூறினார்.
“மருத்துவர்களின் தீவிர முயற்சிக்குப் பிறகும் அவனைக் காப்பாற்ற முடியவில்லை,” என்று செய்தியாளர் கூட்டத்தில் பேங்க்ஸ் தெரிவித்தார்.
அதன் பிறகு, காவல்துறையினர் அந்தச் சிறுவனின் 15 வயது நண்பனை அருகிலிருந்த தெருவில் கண்டனர். அவன் உடலில் கடுமையான கத்திக்குத்துக் காயங்கள் இருந்தன. அவனையும் காப்பாற்ற முடியவில்லை.
வெட்டுக்கத்திகளையும் நீண்ட கத்திகளையும் ஏந்தி முகமூடி அணிந்திருந்த எட்டுப் பேர் கொண்ட கும்பல் இந்தக் கொலையைச் செய்தது என்று சம்பவத்தின் சாட்சிகள், சிசிடிவி படங்கள் மூலம் தெரியவந்ததாக திரு பேங்க்ஸ் கூறினார்.
“விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருந்தாலும், இது இளையர் கும்பல் குற்றத்தின் அடையாளங்களைக் கொண்டுள்ளது. இத்தகைய குற்றங்களில், இது மிகவும் மோசமான ஒன்றாகும். கொலை செய்யப்பட்ட சிறுவர்கள் எந்தவொரு கும்பலையும் சேர்ந்தவர்கள் அல்லர்,” என்றும் அவர் கூறினார்.
தாக்குதல், குறிப்பிட்ட நபர்களை இலக்காகக் கொண்டதா அல்லது யாரையாவது வேறொருவர் எனத் தவறுதலாக நினைத்து நடத்தப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று காவல்துறை கூறியது.