இலங்கையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக இருவர் கைது
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளுடன் தொடர்புடைய இரண்டு நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.
கனடாவில்(Canada) உள்ள பண்ணைகளில் தொழிலாளர் வேலைகளை வழங்குவதாக பொய்யாக வாக்குறுதி அளித்து 5.2 மில்லியன் மோசடி செய்த ஒருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஓய்வுபெற்ற தோட்ட மேலாளரான சந்தேக நபர், காலி(Galle) மற்றும் நிக்கவெரட்டிய(Nikaweratiya) பகுதிகளில் வசிக்கும் நான்கு நபர்களிடமிருந்து தலா ரூ. 1.3 மில்லியன் பெற்று, கனடாவில் வேலை வாய்ப்புகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
பணம் செலுத்திய போதிலும் வாக்குறுதியளிக்கப்பட்ட வேலைகள் வழங்கப்படாததால், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து சந்தேக நபரை அவரது வீட்டில் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையில், சுவிட்சர்லாந்தில்(Switzerland) வேலை வழங்குவதாகக் கூறி ரூ. 1.7 மில்லியன் மோசடி செய்த ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறையில்(Kalutara) உள்ள ஒருவரிடமிருந்து பணத்தைப் பெற்றுள்ளார், பின்னர், பாதிக்கப்பட்டவர் வாக்குறுதியளிக்கப்பட்ட வேலை கிடைக்காததால் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் புகார் அளித்துள்ளார்.
கொழும்பில்(Colombo) உள்ள ஒரு பெரிய தனியார் மருத்துவமனையில் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணிபுரியும் அந்தப் பெண் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.




