அம்பலாங்கொடையில் தொழிலதிபரை கொலை செய்ய முயன்ற இருவர் கைது
அம்பலாங்கொடையில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட நபரொருவரை படுகொலை செய்யச் சென்றதாக கூறப்படும் இரண்டு சந்தேகநபர்கள் கைத்துப்பாக்கி மற்றும் மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது நடைபெற்று வரும் ‘யுக்திய’ விசேட பொலிஸ் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் இராணுவத் தலைமையகத்தில் பணியாற்றும் ஊழியர் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவர் 38 வயதுடைய பன்னிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கைது செய்யப்படும் போது அவர் விடுப்பில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மற்றைய சந்தேக நபர் பலபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொலையை செய்வதற்காக அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளில் போலியான வாகனப் பதிவுத் தகடு இருந்ததையும் விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள “லோகு பாட்டி” என்று அழைக்கப்படும் கிரிமினல் பிரமுகரே இந்த குற்றத்தை திட்டமிட்டு நடத்தியது தெரியவந்தது.





