ட்ரம்ப் ஒரு முரடர்; சலுகை எதிர்பார்க்காதீர்கள்” ; அல்பானிஸை எச்சரிக்கும் மால்கம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கீழ் உலகளாவிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் சிதைந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியா இனியும் மௌனம் காக்கக் கூடாது என முன்னாள் பிரதமர் மால்கம் டர்ன்புல் வலியுறுத்தியுள்ளார்.
கனடா பிரதமர் மார்க் கார்னி அண்மையில் டாவோஸ் நகரில் ஆற்றிய உரையை முன்னுதாரணமாகக் கொண்டு பிரதமர் அல்பானிஸ் செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
ட்ரம்ப்பை ஒரு “முரடர்” (Bully) என வர்ணித்த டர்ன்புல், அவர் மிரட்டல்களுக்குப் பணியாமல் பதிலடி கொடுத்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருவார் எனத் தெரிவித்தார்.
இதேவேளை, அவுஸ்திரேலியப் பொருளாளர் ஜிம் சால்மர்ஸ், கனடா பிரதமரின் உரை “அதிர்ச்சியூட்டும் வகையில்” (Stunning) இருந்ததாகவும், பழைய சர்வதேச உறுதிப்பாடுகள் தகர்ந்து வருவதை அது தெளிவாகக் காட்டுவதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்தச் சூழலில், கனடா பிரதமர் மார்க் கார்னி வரும் மார்ச் மாதம் அவுஸ்திரேலியாவிற்குப் விஜயம் செய்து நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார் என்ற தகவலை பிரதமர் அந்தோனி அல்பானிஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவுடனான ‘ஆக்கஸ்’ (AUKUS) கூட்டணி மற்றும் வர்த்தகப் போர்ச் சூழலில், அவுஸ்திரேலியா தனது இறையாண்மையைப் பாதுகாக்கவும், பிற நாடுகளுடன் இணைந்து புதிய கூட்டணிகளை உருவாக்கவும் இதுவே சரியான தருணம் என டர்ன்புல் சுட்டிக்காட்டியுள்ளார்.





